சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆளுநர் ரவியை சந்தித்தது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையின் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பது மட்டுமின்றி ,அரசியலிலும் ஈடுபட விரும்பினார். இவர் நான் எப்ப வருவேன், எப்படி வருவேன் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்ற வசனம் மூலம் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தினார். ஆனால் பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தினால் தன்னுடைய படம் ஓடுவதற்காக ரஜினி அரசியல்யுக்தியை கையில் எடுத்திருப்பதாக சிலர் கூறினர்.
இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சியில் மாபெரும் தூண்களாக விளங்கிய அம்மா ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக ரஜினி அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்த நிலையில், திடீரென அரசியலில் இறங்கப் போவதில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக புதிய தகவல்கள் பரவி வருகிறது. அதாவது நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் நாடும் முழுவதும் பல்வேறு விதமான விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் இடம் பெற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தும் இடம் பெற்றுள்ளார். கடந்த 6-ம் தேதி கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட போது, பிரதமர் மோடி ரஜினியை சந்தித்து சில நிமிடங்கள் பேசியுள்ளார். அதன் பிறகு பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் ரஜினியை சந்தித்து ஆளுநரை சந்தியுங்கள் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார்.
இவர்கள் என்ன பேசினார்கள் என்ற செய்திகள் வெளிவராத நிலையில், ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் ஆளுநர் ரவியிடம் என்ன பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசியல் பற்றி பேசினோம் ஆனால் அரசியலில் வருவதற்கு எனக்கு எண்ணம் கிடையாது என்று கூறினார். இந்த சந்திப்பின் காரணமாக வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று தற்போது புதிய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.