ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 16 வயது சிறுமி பிளஸ் 2 பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவி சென்ற 6ஆம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்கூடத்தில் சிறப்பு வகுப்பு உள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்தபோது சிறப்பு வகுப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் மாணவியை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மதியம் வேளையில் வீட்டுக்குவந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது மாணவி கோபி அருகேயுள்ள புஞ்சைதுறைபாளையத்தை சேர்ந்த டிரைவரான பிரசாத் மணிகண்டன் (22) என்பவர் தன்னை பவானிசாகருக்கு அழைத்து சென்றார்.
அங்கே ஒரு மறைவான இடத்தில் வைத்து அவர் தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம்செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சூழ்நிலையில் தனக்கு நடந்த கொடுமையை தாங்க முடியாமல் மாணவி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். இது தொடர்பாக புகாரின்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரசாத் மணிகண்டன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் பிரசாத் மணிகண்டன் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.