நாள் முழுதும் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும் அவர்களது களைப்பை போக்கி புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பானமாக தேநீர் இருக்கிறது. உலகம் முழுதும் தண்ணீருக்கு அடுத்தப்படியாக அதிகளவு அருந்தக்கூடிய பானமாக இந்த தேநீர் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களில் தேநீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிமேல் பாக்கெட்டில் 10 ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு டீ கடை பக்கம் கூட செல்ல முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால் ஒரு கிராமத்தில் 5 ரூபாய்க்கு 80 வயதை கடந்த ஒருமூதாட்டி தேநீர் விற்பனை செய்துவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி அருகில் கட்டாலங்குளம் கிராமத்தில் 80 வயதை கடந்த மூதாட்டி வீரலெட்சுமி வசித்து வருகிறார்.
சென்ற 30 வருடங்களுக்கு முன்பு தன் கணவரை இழந்த அவர் அதே கிராமத்தில் வாழ்வாதாரத்திற்கு டீ கடை வைத்து தன் வாழ்கையை நடத்தி வருகிறார். தள்ளாத வயதிலும் முழு உடல்ஆரோக்கியத்துடன் 80 வயதான மூதாட்டி வீரலெட்சுமி, மற்ற முதியோர்களுக்கு முன் உதாரணமாக தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் அடிப்படையில் தினசரி அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்புடன் தன் டீ கடைக்கு வரும் நபர்களுக்கு 5 ரூபாக்கு பசும் பாலில் டீ கொடுக்கிறார். மாலை 6 மணி வரை டீ வியாபாரியாக நாள்தோறும் 13 மணிநேரம் கடுமையான அவரது உழைப்பை மூதாட்டி தொடர்கிறார். நகரத்தில் ஒருகப் டீ 10 -ரூ.20 வரை விற்பனை செய்யப்படுவதால் ஏழை,எளிய உழைக்கும் வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால் இக்கிராமத்தில் 5 ரூபாய்க்கு அசராமல் டீ விற்பனை செய்யும் இந்த மூதாட்டியின் சேவை மனப்பான்மை அனைவரையும் கவர்ந்திருக்கிறது.