சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலை மெட்ரோ ரயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த குப்பைதொட்டியில் கைதுப்பாக்கி ஒன்று இருப்பதை பார்த்து துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குப்பை தொட்டியில் இருந்த கைதுப்பாக்கியை பறிமுதல் செய்து புதுப்பேட்டையிலுள்ள ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த போது இது தீபாவளி மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி என தெரியவந்தது. எனினும் குப்பைத் தொட்டியில் டம்மி துப்பாக்கியை போட்டது யார்?.. என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.