சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை சித்தமல்லி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி அதே பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் நொச்சியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் 12- ஆம் வகுப்பு முடித்தேன். அதன் பிறகு கல்லூரி சேர விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேர முடியவில்லை.
இதே போல் எங்கள் பகுதிகளில் வாழும் மலை குறவன் சமூகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்லூரி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு மலை குறைவன் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் கிடைத்தால் நாங்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க முடியும் என அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியர் சங்கீதா சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.