பாஜகவோடு கூட்டணி அமைத்து பீகாரில் முதல்வராக இருந்து வந்த நிதிஷ்குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை தேசிய அரசியலில் இரண்டு வகையாக பார்க்கலாம். உடனடி தாக்கம் என்னவென்றால், பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறுவதை உறுதி செய்யும் வகையிலே அவருடைய ராஜினாமா இருக்கிறது.
ஏற்கனவே அவர் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டார். ஆகவே தான் ஆளுநரை சந்தித்து ராஜினாமா அளித்திருக்கின்றார். அதே நேரத்தில், தான் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாகவும், இந்த முறை பாஜகவுக்கு பதில் தனக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.
ஆகவே மீண்டும் நிதிஷ்குமாரே முதல்வராக பதவியேற்க இருக்கிறார். என அவரது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இன்று சட்டமன்ற உறுப்பினர்களுடைய கூட்டத்தில் இந்த விஷயத்தை நிதிஷ்குமார் அவர்களுக்கு தெரிவித்திருக்கிறார். பாஜவுடனான கூட்டணியையும் முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்து இருப்பதாக அவர்களிடம் இன்று உறுதியாக தெரிவித்துவிட்டார். ஆகவே அடுத்தபடியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி ஆகிய கட்சியின் ஆதரவோடு அவர் மீண்டும் முதலமைச்சர் ஆக ஆட்சியமைத்து பதவி ஏற்க இருக்கிறார்.
ஓரிரு நாட்களிலே இந்த பதவியேற்பு நடைபெறும். நிதிஷ்குமார் பலமுறை மாறி மாறி பாரதிய ஜனதா கட்சி ஆதரவோடும்,ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்பது பீகாரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலிலே தற்போது இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியுள்ளது.
அடுத்தபடியாக 2024 ஆம் வருடத்திலேயே மக்களவைத் தேர்தல் வரும் போது நிதிஷ்குமார் தேசிய அரசியலுக்கு வருவார் எனவும், எதிர்கட்சிகளின் வேட்பாளராக அவர் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடிக்கு எதிராக களம் இறங்குவார் என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன இந்த திட்டம் தற்போது ஆரம்பகட்டத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்,
தேஜஸ்ரீ யாதவ் அடுத்தபடியாக பீகார் முதல்வராக வரவேண்டும் எனவும், நிதிஷ்குமார் பாட்னா அரசியலில் இருந்து டெல்லி அரசியலுக்கு வரவேண்டும் எனவும், தற்போதைய ஆலோசனைகளில் பேசப்பட்டிருக்கின்றது. அதன்படியே காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் நிதீஷ்குமார் ஆகியன ஒருங்கிணைத்து, பிற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்து விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஆகவே இந்த தாக்கத்தின் இரண்டாவது பகுதி தேசிய அரசியலிலே தெரியவரும். ஆகவே அந்த சமயத்தில் திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், டிஆர்எஸ் போன்ற கட்சிகள் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக ஏற்குமா ? அதற்கான சூழ்நிலை இருக்குமா ? என்ற கேள்வி எல்லாம் அந்த சமயத்தில் ஏற்படும். அப்போது அப்படி அனைவருமே சேர்ந்து மோடிக்கு எதிராக நித்திஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என அரசியல் கருத்தாளர்கள் கூறுகின்றனர்.