Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…600 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது…. பொதுமக்கள் கடும் அவதி…!!!!!!!!

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டதாலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை  நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள 349 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றார்கள். இந்த சூழலில் நேற்று மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாலையில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது. காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் உபரி நீர்  திறந்து விடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவிரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பசுவேஸ்வரர் விதி, செல்லியாண்டி அம்மன் கோவில் அருகே உள்ள பாலக்கரை மற்றும் பவானி நீதிமன்றம் அருகே உள்ள நேதாஜி நகர் போன்ற பகுதிகளில் 600 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் மயான பகுதியையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இறந்தவர்கள் உடலை புதைக்கவும் முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. மேலும் பவானி ஆற்றை ஆக்கிரமித்து நீரோட்டத்திற்கு தடையாக உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பவானி ஆற்றில் கடந்த மூன்று தினங்களாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி,  பவானி, தாசில்தார் முத்துகிருஷ்ணன் தமிழக அரசின் சிறப்பு அதிகாரியான பிரபாகரன் போன்றோர்  பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் பவானி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பம் பகுதியையும் அதிகாரிகள் பார்வையிட்டதுடன் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அது மட்டும் அல்லாமல் வெள்ளம் சூழ்ந்து வீடுகளில் வசிப்பவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் நகராட்சி சார்பில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |