ஒரு பிரச்சினைக்கு இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அதில் ஒரு வழக்கை ரத்து செய்வதற்கு ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் கைது செய்தார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கருங்காலங்குடியை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் மீது இடப்பிரச்சனை சார்பாக மதுரை மாவட்ட போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு பிரச்சனை சம்பந்தமாக ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். அதற்கு மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தால் அதை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இருக்கின்றது. இதனால் ஹக்கீம் சிவகங்கையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணிடம் கேட்டிருக்கின்றார்.
ஆனால் அவர் வழக்கை ரத்து செய்ய ரூபாய் 20,000 லஞ்சம் கேட்டிருக்கின்றார். இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹக்கீம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்களின் அறிவுரையின் படி ரசாயன பவுடர் தடவிய 20,000 பண நோட்டுகளை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் ராமகிருஷ்ணனை கையும் களவுமாக கைது செய்தார்கள். பின் அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.