புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் பால சரஸ்வதி பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 1918-ம் ஆண்டு மே 13-ம் தேதி கோவிந்தராஜூ – அய்யம்மாள் தம்பதியினருக்கு மகளாக பால சரஸ்வதி பிறந்தார். இவருடைய மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசை கலைஞராகவும், நடன கலைஞராகவும் இருந்தார். அதன் பிறகு பால சரஸ்வதியின் பாட்டியின் சகோதரி புகழ்பெற்ற வீணை தனம்மாள் ஆவார். இந்நிலையில் பால சரஸ்வதியின் தந்தை கோவிந்தராஜு ஒரு இசை கலைஞராகவும், அய்யம்மாள் ஒரு சிறந்த பாடகியாகவும் இருந்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த குடும்பத்திலிருந்து வந்த பாலசரஸ்வதி 3 வயதிலிருந்தே பிரபலமான பரதநாட்டிய கலைஞரான மயிலாப்பூர் கௌரி அம்பாளிடம் நடனம் கற்க ஆரம்பித்தார்.
இதைத்தொடர்ந்து கந்தப்ப நட்டுவானரிடம் நடன கலையை பால சரஸ்வதி கற்க ஆரம்பித்தார். பால சரஸ்வதிக்கு 7 வயது இருக்கும்போது புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் அவருடைய பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இவருடைய நடனத்தை பாராட்டாத வர்கள் எவருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு 7 வயதிலேயே சிறப்பாக நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பால சரஸ்வதி. புகழ்பெற்ற வாஷிங்டன் பல்கலைக்கழகம், வெஸ்லின் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் நடனமாடிய ஒரே இந்திய பெண்மணி என்ற பெருமையை பாலசரஸ்வதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவால் ஈடு இணையற்ற நடந்த பொக்கிஷங்கள் என்ற தலைப்பில் 100 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய பெண்மணி பால சரஸ்வதி ஆவார். கடந்த 1955-ம் ஆண்டு பால சரஸ்வதி சங்கீத நாடக அகாதமி விருதையும், கடந்த 1973-ம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதும், கடந்த 1975-ம் ஆண்டு இசை பேரறிஞர் விருதும், கடந்த 1981-ம் ஆண்டு சங்கீத கலாசிகாமணி விருதும், பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அதன் பிறகு பால சரஸ்வதி பரத நாட்டியத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளும், சாஸ்திர சம்பிரதாயத்திற்குள்ளும் அடைக்கும் கலாச்சாரத்தை எதிர்த்ததால் அவருக்கு இந்தியாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என அவருடைய மருமகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பால சரஸ்வதியின் மருமகனும் மிருதங்க கலைஞருமான டக்லஸ் எம். நைட் பால சரஸ்வதியின் வாழ்க்கை வரலாறை ஆங்கிலத்தில் “பால சரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பால சரஸ்வதி அவர் கலையும் வாழ்வும் என்ற நூல் தமிழிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படி பல விருதுகளையும் புகழையும் பெற்ற நடன மங்கை பால சரஸ்வதி கடந்த 1984-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தன்னுடைய 65-வது வயதில் சென்னையில் உயர்நீத்தார்.