இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் வருகின்ற 7 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான செயற்கைக்கோள் தயாரிக்க இஸ்ரோ புதிய முயற்சி மேற்கொண்டது. அதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளை கொண்டு செயற்கைக்கோளுக்கான மென்பொருள் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்ட திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பத்மினி, ஜெப்ரின், இருதயா, ஹரி வைஷ்ணவி, கௌரி, பிருந்தா, அஷ்தா ராணி, பவதாரணி, ஸ்வேதா, ஏஞ்சல், யசோதா தேவி ஆகிய 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரோ சார்பில் மென்பொருள் தயாரிப்புக்கான தொழில்நுட்ப உதவி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாணவிகள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் ஆர்டினோ ஐ.இ.டி. என்ற மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி மூலமாக இஸ்ரோ உதவியது.
இதனையடுத்து மாணவிகள் இந்த மென்பொருளை தயார் செய்து அனுப்பினர். நாடு முழுவதும் 75 பள்ளிகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட மென்பொருட்களை கொண்டு, நாளை மறுநாள் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவிகள் 10 பேரும் நாளை திருமங்கலத்தில் இருந்து சென்னை வந்து இறங்கி ஸ்ரீஹரிகோட்டா செல்கின்றனர். இந்நிலையில் திருமங்கல அரசு பெண்கள் மேல்நிலைக்கு நேற்று திடீரென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றார். அப்போது செயற்கைக்கோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளை நேரில் சந்தித்து கலந்து உரையாடினார். மேலும் அவர்களுக்கு சலவை அணிவித்து வாழ்த்தினார். இது குறித்து சாதனை மாணவிகள் கூறியது, செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. இதற்காக கடந்த 4 மாதங்களாக உழைத்தோம். நாங்கள் தயாரித்த மென்பொருள் செயற்கைக்கோளில் பொருத்தப்படுவதை நினைக்கையில் பெருமையாக உள்ளது என்று கூறினார்கள்.