இந்திய தடகள வீரரான நீரஜ் சோப்ரா என்பவர் 1997 ஆம் வருடம் டிசம்பர் 24ஆம் தேதி பிறந்துள்ளார். இவர் இந்திய ஈட்டியெறுதல் வீரரும் இந்திய தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவர். 2016 ஆம் வருடம் 20 வயதிற்கு குறைவானோருக்கு உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார்.
மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவிற்கான கொடியேற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரது முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவிற்காக தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்தநிலையில் இன்று ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் எறிந்து ஒரு மகத்தான சாதனை படைத்துள்ளார்.
1896 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் ஒரு தனிநபர் கூட தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றி எழுதி ஒரு தங்க மகனாக உருவெடுத்து இருக்கின்றார் நீரஜ் சோப்ரா. கடைசியாக நார்மல் ரிச்சர்ட் என்பவர் 1900 வருடம் இந்தியா சார்பில் தடகளப் போட்டியில் வெள்ளி வென்றவர். ஆண்களுக்கான 200 மீட்டர் தடைகள போட்டியில் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதன் பின் நமது ஆடவர் ஹாக்கி போட்டியில் எட்டு முறை தங்கம் வென்று இருக்கின்றோம். இந்த நிலையில் கடைசியாக நமக்கு கிடைத்த தனி நபர் தங்கப்பதக்கம் ஆனது 2008 ஆம் வருடம் வந்தது. அப்போது சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் போட்டியின் தங்கம் வென்றவர் அபினவ் பிந்த்ரா. இதனை அடுத்து 13 வருடங்களுக்குப் பின் மீண்டும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்த சாதனை இன்னும் நூறு வருடங்கள் அல்ல அதை தாண்டியும் கூட பேசப்படும்.