கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்பு குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.