நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி பத்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வி வீட்டின் வராண்டாவிலும் ரங்கப்பன் தனி அறையிலும் மகன் மற்றும் மருமகள் ஒரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது இரண்டு மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க நோட்டமிட்டு கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் செல்வி இயற்கை உபாதை காரணமாக வீட்டின் கழிவறைக்கு சென்று இருக்கின்றார். அப்போது வீட்டின் வெளியே நின்ற இரண்டு மர்ம நபர்களும் இரும்பு கம்பியால் வீட்டின் கதவின் தாழ்ப்பாளை உடைத்துவிட்டு உள்ளே சென்று பதுங்கி இருந்தார்கள். கழிவறையில் இருந்து செல்வி மீண்டும் வந்து வராண்டாவில் படுத்து உறங்கினார்.
அப்பொழுது பதுங்கி இருந்த இரண்டு நபர்களும் செல்வியின் கலுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது செல்வி கூச்சலிட்டு இருக்கின்றார். இதனால் மர்ம நபர்கள் அவரை காலால் உதைத்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். அவரது கழுத்தில் 10 பவுன் தங்கச் சங்கிலி இருந்துள்ளது. அதன் மதிப்பு மூன்று லட்சம் இருக்கும் என சொல்லப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றார்கள்.