திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான இரண்டு மீனவர்களை விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் அமலி நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின், பிரசாந்த், பால்ராஜ், நித்தியானந்தம் உள்ளிட்ட நான்கு பேரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்ப முயன்ற போது திடீரென கடலில் பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை படகு தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் 4 மீனவர்களும் படுக்கையில் இருந்து கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அங்கு வந்த சக மீனவர்கள் பால்ராஜ் மற்றும் நித்தியானந்தம் உள்ளிட்ட இரண்டு பேரையும் மீட்டார்கள். மற்ற இரண்டு பேரை தேடிப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. பின் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இரண்டாவது நாளாக நேற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். தற்பொழுது விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.