ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டிருக்கிறார். மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்ற நிலையில் மேட்டூர் அணையிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றும் சூழல் எழுந்திருக்கின்றது. இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு விழாவின்போது ஆறுகளில் நீராடும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மக்கள் நீராட வேண்டும்.
மேட்டூர் அணை கரையோரம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் மீறுபவர்கள் மீது காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இதற்கிடையே ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் பக்தர்கள் நீராட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவில் ஆறுகளில் இறங்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடமும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.