அரசு பேருந்துகளில் நாளையிலிருந்து முதற்கட்டமாக ஏழு நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்பட உள்ளது
தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் செல்கின்றது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவில் அனுப்புவதற்கு ஏதுவாக விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாள்தோறும் அனுப்ப வேண்டிய பொருள்களை இரண்டு ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில் பேருந்துகளில் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் நாளை முதல் பார்சல் சேவை தொடங்குகிறது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்குகிறது என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.