சீனாவின் உளவு கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் சிறப்பம்சம் கொண்டது. எனவே தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர துறைமுகங்களை இது உளவு பார்க்கும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, உஷாராக இருக்கும்படி இந்த மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும் அரசியல் குழப்பமும் அங்கு நிலவி வருகிறது. அந்நாட்டின் தெற்கே உள்ள அம்பன்தோட்டாவில், நம் மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியுடன் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
இந்நிலையில் இலங்கைக்குள் நுழைய விடக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி சீனாவின் உளவு கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்து அங்கு ஒரு வாரம் நிலை நிறுத்த உள்ளது. அந்தக் கப்பலால் சுமார் 750 கிலோமீட்டர் சுற்றளவில் நடக்கும் அனைத்து நிலைகளையும் உளவு பார்க்க முடியும்.இதனால் இந்தியா அதிலும் குறிப்பாக தமிழக உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.