யானைகள் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே ஏக்கல் நத்தம் பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வேலை முடிந்தவுடன் ஓ.என். கொத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் வனப்பகுதியை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து ஆந்திர எல்லைக்குள் சென்ற யானை கூட்டம் திடீரென 2 பேரையும் துரத்தியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் ஓடி உள்ளனர். இருப்பினும் விடாமல் துரத்திய யானை கூட்டம் கோவிந்தன் மற்றும் சீனிவாசன் ஆகிய 2 பேரையும் பயங்கரமாக தாக்கியது. இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக கோவிந்தன் மற்றும் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.