சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு வருகின்றது. நிகழாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2.94 லட்சம் பேர் வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். முதன்முறையாக கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்ப பதிவு 4 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோன்று பொறியியல் கல்லூரியில் இளநிலை படிப்பு இடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை பதிவும் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. இதில் மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை சென்னை பல்கலைக்கழகம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.