திருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா வரலாறும் தெரிந்து கொள்ளுங்கள்..!!
இனி எல்லார்க்குமே கொடுக்கலாம் திருநெல்வேலி அல்வா:
ருசியான இருட்டுக்கடை ஹல்வா உங்கள் கையினாலே செய்யலாம்..!!
அல்வா என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும்.
அல்வா என்றசொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். இப்படி பட்ட அல்வா தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலி அல்வா மிகபிரபலம்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பொழுது இந்த அல்வாவை முதன் முதலாக ருசித்துள்ளார்.
அதன் சுவைக்கு அடிமை ஆன அவர் அந்த அல்வா தயாரித்தவரை தன்னுடனே அழைத்து வந்துவிட்டார்.
அவர் மூலம் திருநெல்வேலிக்கு அல்வா தயாரிப்பு அறிமுகம் ஆனது. ஆனால் அவர் அங்கு தயாரித்த அல்வாவை விட திருநெல்வேலியில் தயாரித்த அல்வா அதை விடவும் ருசி அதிகமாகஇருந்தது.
இன்றளவும் இந்த அல்வாவின் ருசிக்கு தாமிரபரணி ஆற்று தண்ணி தான் காரணம் என்றும் பரவலாக பேசப்படுகிறது. நெல்லையில் நூறு வருடங்களுக்கு மேலாக இந்த அல்வாவிற்கு பெயர் பெற்ற ஒரே கடை திருநெல்வேலி இருட்டுக்கடை.
இந்த கடையில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரே ஒரு விளக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர், இதனால் இந்த கடைக்கு இருட்டுகடை என்று பெயர் வந்தது. இன்றளவும் இவர்கள் வெறும் சாதாரண 40 வாட்ஸ் பல்பு ஒன்றை மட்டுமே பயன்படுத்தி விற்பனைசெய்கிறார்கள்.
இருட்டுக்கடை அல்வா விற்பனை மற்ற கடைகளை போல முழு நேர விற்பனை கிடையாது. மாலை 6 மணிக்கு விற்பனைதொடங்கும் முன் 4 மணி முதலே மக்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுவார்கள். அதிகபட்சம் 8 அல்லது 9 மணி வரைமட்டுமே விற்பனை நடைபெறும்.
அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 300 கிராம்,
கோதுமை – 200 கிராம்,
சீனி – 600
கிராம் நெய் – தேவையான அளவு
நெய்யில் வருத்த முந்திரி – தேவையான அளவு ருசியான
இருட்டு கடை அல்வா செய்யும் முறை:
இருட்டுக்கடை அல்வாவின் ருசி, அவர்கள் கையிலே செய்வது தான்.
கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு.
கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க, அரைக்க பாலாக பொங்கும்.
அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும்.
இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும்.
பால் கொதித்து வரும்போது, சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது.
பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும்.
கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும்.
நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் ருசி அப்படியே இருக்கும்.
திருநெல்வேலியில் அல்வா, பலரும் விரும்பும் கடை இருக்கும் இடம்:
இருட்டுக்கடை அல்வா திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் எதிர் புறம் உள்ளது. திருநெல்வேலிக்கு வரும் பலருக்கு இந்தகடை அல்வா கிடைப்பது இல்லை. இதனால் இதற்க்கு அடுத்த இடத்தில் உள்ள சாந்தி ஸ்வீட் அல்வா இங்கு மிக பிரபலம்.
ஆனால் சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக நெல்லையின் பல இடங்களில் கிடைக்கிறது.