தொலைபேசியில் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக அம்ரித் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கலெக்டரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி உள்பட பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கலெக்டர் அம்ரித் காவல்துறை சூப்பிரண்டுஆஷிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். பின்னர் உடனடியாக இம்மாவட்டம் முழுவதும் இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஊட்டி நகர பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்பட பல பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதைப்போல் இம்மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய பிறகு தான் வாகன ஓட்டிகள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பின்னர் ஊட்டி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த வெளியூர்களில் இருந்து வந்த நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கலெக்டர் செல்போனுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த எண்ணை வைத்து அவர் யார் எந்த ஊரில் வசிப்பவர் எதற்காக மிரட்டல் விடுத்தார் என சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நபரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குழு மதுரைக்கு சென்றுள்ளது.