சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்காத வழக்கில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாடகம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரில் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின் மகன் இறந்து விட்டதால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கார்த்திகேயனின் பெற்றோர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் இருசக்கர வாகன விபத்து வழக்குகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகேயனின் பெற்றோருக்கு மொத்தம் 12.63 லட்ச ரூபாயை வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து கணக்கிட்டு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து உரிய காலத்தில் இழப்பீடு கிடைக்காததால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்று மனுவை கார்த்திகேயனின் பெற்றோர் தாக்கல் செய்துள்ளனர். பின்னர் அதை விசாரித்த நீதிமன்றம் ஜப்தி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து சிவானந்தா-காந்திபுரம் காலனி வழித்தடத்தில் இயங்கி வரும் அரசு பேருந்து தற்போது ஜப்தி செய்யப்பட்டுள்ளது.