மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்டெருமை புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டெருமையை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து வனத்துறையினர் மாநகராட்சி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காட்டெருமை சமாதானபுரம் பகுதியில் இருந்து வண்ணார்பேட்டை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த காட்டெருமை பாளையங்கோட்டை பகுதிகளிலும் உலாவரும் காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் வனத்துறையினர் 2-வது நாளாக காட்டெருமையை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த காட்டெருமை சேரன்மகாதேவி கொழுந்து மாமலை பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.