நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18) நெல்லை அருகே உள்ள தனியார் பள்ளியில் பிஎஸ்சி பட்டப் படிப்பிற்கு சேர்ந்து உள்ளார்.
அதற்கான கல்லூரி கட்டணம் 12,000-த்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தினார். அவர் கூலி தொழிலாளி என்பதால் குடும்ப செலவிற்கு போதிய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இருந்தாலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியுள்ளார்.தனது படிப்பு செலவிற்காக பெற்றோர் சிரமப்பட்டு பணம் செலுத்துவதை எண்ணி பாப்பா மனவேதனை அடைந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர் தூக்கில் சடலமாக தொங்கிய மகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி எழுதிய கடிதத்தில்,முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்த பாப்பா என்கிற அந்த மாணவி, “கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் பெற்றோர் சிரமப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். தன்னுடைய மரணத்தில் எந்த ஒரு மர்மமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த கடிதம்”எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.