பகாமஸ் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஹைதி நாட்டைச் சேர்ந்த 17 அகதிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதி நாட்டிலிருந்து அகதிகள் 60 பேர் ஒரு படகில் சென்றுள்ளனர். அந்த படகு பகாமஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் சென்ற போது திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த பகாமஸ் ராயல் காவல் படை மற்றும் ராயல் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர்.
அதில் தற்போது வரை பெண்கள் 15 பேர், ஒரு நபர் மற்றும் ஒரு குழந்தை என்று மொத்தமாக 17 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. படகில் 60 நபர்கள் இருந்த நிலையில், 25 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் சிலர் மாயமாகியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமான முறையில் இந்த ஆட்கடத்தல் சம்பவம் நடந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டின் அதிபர் டேவிஸ் தெரிவித்திருக்கிறார்.