திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 55-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் அனுமதிக்க படாததால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்நிலையில் ஸ்ரீநகர் காலனி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையம் போடப்பட்டு இருந்தது.
இங்கு தாமதமாக வந்த 15-க்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.