சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக – பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது: “அதிமுகவிற்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபரான புகழேந்தி உட்பட ஓ பன்னீர்செல்வத்தின் தலைமையில் 300 பேர் கொண்ட ரவுடிகள், குண்டர்கள், சமூகவிரோதிகள் ஆகியோர் கையில் கத்தி, கடப்பாரை, தடி கற்களோடு வந்தன. தலைமை அலுவலகத்தின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் அதை உடைத்து உள்ளே சென்றுள்ளன. இது அனைவருக்கும் தெரியும்.
இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் எந்த வாகனத்தில் தலைமை அலுவலகத்திற்கு வந்தாரோ அதே வாகனத்தில் அலுவலகத்திற்கு உள்ளே இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை தலைமை அலுவலக ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து கட்சி தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக பதிவு செய்யப்படுவதற்கான சான்றுகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவை, புதுச்சேரி, திருச்சி அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஓ பன்னீர்செல்வம் தான் வந்த வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளதாக” அவர் குற்றம் சாட்டியுள்ளார்.