நீலகிரியில் செருப்பை கழற்ற சொன்ன சிறுவனிடம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சென்றார். அப்போது விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான்.
இந்த சம்பவம் நடக்கும் போது நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டது. இந்த சம்பவம் குழந்தைகள் நல வாழ்வு மையம் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “நான் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது என் செருப்பு புல்வெளியில் மாற்றிக்கொண்டது. பின்னர் அங்கு இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உடனே அவர்களில் ஒருவனை அழைத்து கழற்ற சொன்னேன். என்னுடைய பேரன் போல் நினைத்துதான் காலணியை கழற்ற சொன்னேன்; பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவர்களை அழைத்தேன். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. அப்படி ஏதும் தவறாக நினைத்து இருந்தால் அதை நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
ஆனாலும் அந்த சிறுவன் மற்றும் தெப்பக்குடி ஊர் பழங்குடியின மக்கள் மசினகுடி காவல்நிலையத்திற்கு சென்று நேற்று மாலை புகாரளித்தனர். இதனிடையே அமைச்சரை கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ஊட்டி விருந்தினர் மாளிகையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.