திருச்சி பெரியமிளகு பாறையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இதனை ஒட்டிய அணுகுசாலையில் தினசரி பேருந்து, வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. பெரியமிளகு பாறை, பொன்னகர், கோரி மேடு உள்ளிட்ட பகுதியிலிருந்து விரைவாக பேருந்து நிலையத்தை அடையும் வழித்தடமாக இந்த சாலை இருக்கிறது. அத்துடன் இந்த சாலை வழியே மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், பழனி போன்ற ஊர்களுக்கு பேருந்து செல்கிறது.
இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சாலையிலிருந்து சற்று வெளியே தள்ளி கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மட்டும் குறுகலாக இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் எளிதாக வளைவில் திரும்ப முடியாத நிலை இருக்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அங்கு அரங்கேறி வந்தது. ஆகவே ஆரம்ப சுகாதார நிலையத்தை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று நேற்று அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.