வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி, நிரந்தரம் கிடையாது என்று சென்னையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.
யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரியா யோகா மூலமாக இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசிய அவர் ஓம் குருவே சரணம் என்று பேச்சை தொடங்கினார். பின்னர் “என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். இது பாராட்டாத, திட்டா என எனக்கு தெரியவில்லை.
எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தவை ‘ராகவேந்திரா’ மற்றும் ‘பாபா’ ஆகிய இரு திரைப்படங்கள்தான். பாபா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பேர் இமயமலைக்கு சென்றதாக கூறினார்கள். என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் இன்னும் நான் நடிகராக இங்கே இருக்கிறேன். இமயமலையில் சில மூலிகைகள் கிடைக்கும். அதை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான ஆற்றல் மற்றும் வைட்டமின் சக்திகள் கிடைக்கும்.
இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வதுதான் முக்கியம். நோயாளியாக இருப்பதினால் பிறருக்கும் நாம் கஷ்டத்தை கொடுக்கிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒவ்வொருவருக்கும் ரொம்ப முக்கியம். இல்லை என்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே நடமாடிக் கொண்டிருக்கும்போதே போய் சேர்ந்து விட வேண்டும். பணம், புகழ், பெயர், பெரிய பெரிய அரசியல்வாதிகள் என எல்லாரையும் நான் பார்த்தவன். ஆனால் சந்தோசம், நிம்மதி 10% கூட இல்லை. ஏனென்றால் சந்தோசம், நிம்மதி நிரந்தரம் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.