சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுதும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்ற சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் மிதக்கும் விதமாக செஸ் போர்டுகள் வைக்கப்பட்டது. அதாவது 16 குழுக்கள் விளையாடும் விதமாக இடைவெளி விட்டு செஸ் போர்டுகள் தண்ணீரில் மிதக்க விடப்பட்டது.
நீச்சல் பயிற்சி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொண்டு தண்ணீரில் நின்றபடி செஸ் விளையாடி அசத்தினர். இதேபோன்று ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி கோலம்இடும் போட்டி நடைபெற்றது. இவற்றில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் பங்கேற்று செஸ் போர்டு போன்று கோலமிட்டு அசத்தினர்.
அத்துடன் செஸ் போர்டில் பயன்படுத்தப்படும் யானை, குதிரை, ராஜா, ராணி உள்ளிட்ட பொம்மைகள் ஆகிய வடிவத்தில் ரங்கோலி கோலங்களும் இடப்பட்டது. இதனை கலெக்டர் விசாகன் பார்வையிட்டார். அதன்பின் செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.