கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். ஆனால் பள்ளி தரப்பிலிருந்து மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் அதை ஏற்கவில்லை. மாணவியின் இறப்பில் ஏதோ சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 17ஆம் தேதி போராட்டம் கலவரமாக வெடித்தது.
இதைத்தொடர்ந்து மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. அதேவேளையில் ஸ்ரீமதியின் மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சதீஷ்குமார் அரசு மருத்துவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றோர்கள் வாங்கிக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். கண்ணியமான முறையில் மாணவியின் இறுதி சடங்கை நடத்துங்கள். மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும் என்று நீதிபதி ஆறுதல் கூறினார். இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்வதற்கு மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். நாளை காலை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொண்டு மாலைக்குள் மாணவியின் உடலுக்கு இறுதி சடங்கை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.