நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் லட்சுமி கார்டன் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முனிசிபல் காலனி பகுதியில் 6 பேருடன் சேர்ந்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு ஜவுளி வியாபாரியான பரணிதரன் என்பவர் ரூபாய் 5 லட்சம் பணத்தை நிதி நிறுவனத்தில் இருந்து 24% வட்டிக்கு வாங்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு ரூபாய் 1 லட்சம் பணத்தை 24 சதவீத வட்டிக்கு வாங்கியுள்ளார். இந்த பணத்தை திரும்ப செலுத்துவதற்காக பரணிதரன் 2 காசோலைகளை நிதி நிறுவனத்தில் கொடுத்துள்ளார். அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியது. இதன் காரணமாக பரணிதரன் 7,08,000 ரூபாயை செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பரணிதரன் மீண்டும் அபராத தொகையுடன் தான் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்துவதற்காக ஒரு காசோலையை நிதி நிறுவனத்தில் கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியது. இதன் காரணமாக கணேசன் கடந்த 2018-ம் ஆண்டு நீதிமன்றத்தில் பரணிதரன் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரனுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் நிதி நிறுவனத்தில் இருந்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காவிட்டால் கூடுதலாக ஒரு மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.