நீலகிரி மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மேலும் கோத்தகிரி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மைதானம் தான் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மைதானமாகும். இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட வருவது மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக காந்தி மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் விளையாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இங்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் நடைபெற்றுள்ளது. இது தவிர காலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள், கால்பந்து, கூடைப்பந்து, விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சி மீண்டும் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது காந்தி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் கால்பந்து அகாடமிகள் மூலமாக காலை மற்றும் மாலை வேலைகளில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் 30க்கும் மேற்பட்டோருக்கு கால்பந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அவர்கள் மாவட்ட மாநில போட்டிகளில் பங்கேற்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் பள்ளிகளுக்கு இடையே போட்டிகளில் தங்களது பள்ளியை சேர்ந்த கால்பந்து வீரர்கள் தயார் செய்யும் விதமாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் தினம் தோறும் காந்தி மைதானத்திற்கு அழைத்து சென்று தகுதி பெற்ற பயிற்சிகள் மூலமாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றார்கள். இதனால் காந்தி மைதானம் விளையாட்டு மைதானம் களைக்கட்டி வருகிறது.