தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகே மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யும்முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். “ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு செய்யும் முறைக்கு, வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த வேண்டும். விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட்டு இறுதி செய்தபின் அது நடைமுறைக்கு வரும்” என்றார். மாதம் ஒரு முறை மின் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்று திமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.