தமிழ்நாடு நாள் விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் சில அளவைகள் துறை சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி 20 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அந்த கண்காட்சி வருகின்ற 24-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு விழா நடைபெற்ற தினத்தன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைகள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை தொழில்துறை அமைச்சர் தங்க தென்னரசு, செய்தி துறை அமைச்சர் மு. பெ. சுவாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த கண்காட்சியினை பொதுமக்கள் இலவசமாக காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்டு களித்து வருகின்றனர். இந்த கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரிய வகை தொல்பொருள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை மாகாணத்தில் பழைய வரைபடங்கள் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, சென்னை மாநில வரைபடம் முதல் தற்போதைய தமிழ்நாடு மாநில வரைபடம் வரை அறிய வகை புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த சிறப்பு கண்காட்சி வருகின்ற 24-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.