மதுரை சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா கொண்டுவந்த தந்தையும் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் ஆர்.சி.தெருவை சேர்ந்த யாசின் முகமது அலி என்பவர் சென்ற மாதம் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முகமது அலியை சந்திப்பதற்காக அவரின் தந்தை இப்ராஹிம் மற்றும் நண்பர் ஜெயசூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் மனு வழங்கி நேற்று காலை பார்க்க வந்தள்ளனர். அப்போது போலீசார் பிரதான சாலையில் சோதனை செய்த பொழுது ஜெயசூர்யபிரகாஷ் அவரின் உள்ளாடைக்குள் 105 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில், நேற்றைய தினம் சிறையில் இருந்து முகமது அலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட இருந்தார். இதனால் அங்கு யாசின் முகமது அலிக்கு கஞ்சா கொடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் முகமது அலி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவில்லை. இதனால் சிறைக்கு வந்து கஞ்சா கொடுக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் சோதனையில் பிடிபட்டுவிட்டதாகவும் தந்தை இப்ராஹிம் மற்றும் நண்பர் ஜெயசூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். இதனால் போலீசார் இருவரையும் கைது செய்தார்கள்.