மர்ம நபர்கள் கணவன், மனைவி இருவரையும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் சங்கர பாண்டியன்(72)-ஜோதிமணி(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவரது மகன் சதீஷ் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று சங்கரபாண்டியனின் வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அப்போது கதவு திறந்து கிடந்தது. இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சங்கர பாண்டியனும், ஜோதி மணியும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது. இதனை அடுத்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தம்பதியினரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் தான் பணம், நகைக்காக கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.