தாய் மற்றும் மகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழிக்கோடு அருகே தலப்பிள்ளைவிளை பகுதியில் நிர்மலா (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் நாகர்கோவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அதன் பிறகு திடீரென இருவரும் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் நிர்மலாவிடம் வந்து விசாரித்ததில், ஒரு மனுவை அவர்களிடம் கொடுத்தார்.
அந்த மனுவில், எங்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கை 3 பேர் வாபஸ் வாங்குமாறு கூறி அடிக்கடி துன்புறுத்தியதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் அழைத்து சமாதானமாக பேசி அனுப்பினர். ஆனால் 3 பேரும் விடாமல் என்னை அடிக்கடி துன்புறுத்துவதோடு, கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது