கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் கோழிப் போர்விளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சாபொட்டலங்கள் இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடமிருந்து மொத்தம் 1 ½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அதன்பின் 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் முகமாத்தூர்பகுதியை சேர்ந்த ரஞ்சித் (29), பள்ளியாடியை சேர்ந்த வினித் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது ” நாங்கள் 2 பேரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கேளாவுக்கு கட்டிடவேலைக்கு சென்றோம். அப்போது அங்கு கோடியூரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவரிடமிருந்து கஞ்சா வாங்கிவந்து சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்து வந்தோம். அந்த வகையில் கஞ்சாவை விற்பதற்காக மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்றபோது காவல்துறையினரிடம் சிக்கினோம்” என்று அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ரஞ்சித்தையும், வினித்தையும் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோடியூரை சேர்ந்த மணிகண்டனை தேடி வருகின்றனர்.