எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சபாநாயகர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேபோன்று ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில் ஓபிஎஸ், அதிமுக கட்சியில் நிர்வாகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்படுவதாக ஏற்கனவே எடப்பாடி அறிவித்துள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவரை இபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி ஆர்.பி உதயகுமார் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் அதிமுக கட்சியில் நடக்கப்படும் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் வேலுமணி கொடுத்த கடிதங்கள் பரிசீலனையில் இருக்கிறது. அதன் பிறகு அதிமுக கட்சியின் ஒற்றை தலைமை பிரச்சனையானது நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருப்பதால், அவற்றின் உத்தரவுகளை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் சபாநாயகரின் இந்த முடிவின் காரணமாக ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர் அங்கீகரிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.