ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெண் என்ஜினீயர் கல்லடி ஆற்றில் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வினிதா சவுத்ரி என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு வினிதா சவுத்ரி தன்னுடன் பணிபுரியும் 9 பேருடன் சுற்றுலா வந்துள்ளார். அங்கு சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கல்லடியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் வினிதா சவுத்ரி மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் அவர்களது நண்பர்களுடன் அமர்ந்திருந்தார். மேலும் அங்கு மழை பெய்ததால் அவர்கள் அனைவரும் வெள்ளம் செல்வதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வினிதா சவுத்ரி ஆற்றோரத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது திடீரென ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டார்.
இவர்கள் தேடிப்பார்த்தும் வினிதா சவுத்ரி கிடைக்காததால் இது குறித்து புதுமந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வினிதா சவுத்ரியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து இரவு நேரமானதாலும், வனப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டு மறுநாள் காலையில் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 2 குழுவாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு குழுவினர் கல்லட்டி நீர் வீழ்ச்சியில் இருந்தும், மற்றொரு குழுவினர் ஆறு கரையோரங்களில் தேடினர். இதனை அடுத்து ஒரு மரத்தில் பிணமாக கிடந்ததை பார்த்தனர்.
அதன்பின் குழுவினர் வினிதா சவுத்ரியின் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மீட்புக்குழுவினர் கூறுவதாவது, 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஆற்றில் இருந்து மரக்கிளைகளை பிடிக்க முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரம் வினிதா சவுத்ரி அடித்து செல்லப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வினிதா சவுத்ரி மற்றும் 9 பேர் தங்கியிருந்த விடுதி அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதியின்றி செயல்பட்ட தங்கும் விடுதிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.