ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய்த்தொற்று இப்போது அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. இப்போது சுமார் 50-க்கு அதிகமான நாடுகளில் இந்த நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இது தொடர்பாக கூடுதல் அக்கறை எடுத்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குரங்கு அம்மை தொற்றானது கண்டறியப்பட்டு இருக்கிறது. சென்ற 12 ஆம் தேதி வளைகுடா நாட்டிலிருந்து கேரளா திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த குழந்தையின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திராவில் குரங்கு அம்மை கண்டறியப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரையிலும் குரங்கு அம்மை நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து பன்னாட்டு விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதுவரையிலும் 63 வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.