பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இந்த திட்டத்தின் மூலமாக அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.
ஆனால் 2004 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் முன்பு இருந்தது போல இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சலுகைகள் எதுவும் கிடையாது என அரசு ஊழியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பிற மாநிலங்களின் அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஜார்கண்ட் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக வளர்ச்சி ஆணையர் தலைமையில் மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தனிக்குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.