தொடர் கனமழையின் காரணமாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சேலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது நாளாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக கடந்த வருடத்தை விட கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதோடு சேலையாறு மின் நிலையம் 1 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பிறகு பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 790 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதோடு, மின் நிலையம் 2 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பிறகு கேரளாவுக்கு வினாடிக்கு 620 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனையடுத்து சேடல் பாதை வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 2700 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பொதுப்பணி துறையினர் தொடர்ந்து நீர்மட்டத்தை கண்காணித்து வருவதோடு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் வால்பாறை பகுதிகளில் சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தொடர்ந்து பாதுகாப்பான அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர்.