மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் மத்திய,தெற்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.