தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அரூர் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிம்பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி நேற்று மதியம் வந்தனர். அப்போது திடீரென இரண்டு பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு மற்றும் போலீசார் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்எல்ஏக்கள் கூறியது, அரூர் தொகுதி கீழானூர் கிராமத்தில் வாணியாற்றின் குறுக்கே ரூ. 4 கோடி 40 லட்சத்தில் புதிய தரைப்பாலம் அமைக்க பூமி பூஜை நடந்துள்ளது.
ஆனால் அந்த தொகுதி எம்எல்ஏ வை அழைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை அழைக்காமல் இந்த பணியை எப்படி தொடங்கினார்கள். அதனைபோல மாவட்டத்தில் பலமுறை மக்கள் பிரதிநிதி அழைக்காமல் அரசு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கீழனூர் கிராமத்தில் தரைபாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்ணா போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தனர். இது குறித்து 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.