இலங்கை நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு அதிபர், பிரதமர் உட்பட ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் திணறி வருகிறது. இதனிடையே அந்நாட்டில் நடந்து வரும் அசாதாரண சூழலை தீர்க்க புதியதாக அமையும் அரசு உடனடியாக தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மீண்டுமாக வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலிசுங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “இந்நேரத்தில் இலங்கையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அந்நாட்டில் அமைதி நிலவ அமெரிக்கா முன்பே விடுத்த அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவானது அனைத்து வன்முறைகளையும் கண்டிக்கிறது. சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்படவேண்டும். நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டுவரும் தீர்வுகளை விரைவாக செயல்படுத்த அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். அதன்பின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகார பரிமாற்றம் அவசியம் ஆகும். அதன் வாயிலாகவே வெளிப்படைத் தன்மை, ஜனநாயக ஆட்சி, பொறுப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கை மக்களின் கோரிக்கைகளை நினைவாக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.