தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை ஏப்ரல் மாதம் 21-ம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் தென்காசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் மதுரை வழியாக மறுநாள் அதிகாலை 3:48 மணி அளவில் உடுமலையை வந்தடையும். அதன்பின் 3:50 மணிக்கு புறப்பட்டு கோயம்புத்தூர் வழியாக சென்று காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி வழியாக இரவு 10:33 மணிக்கு உடுமலையை வந்தடையும். இங்கிருந்து இரவு 10:35 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், மற்றும் சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 7: 45 மணி அளவில் வரும். இந்த ரயிலில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
ஆனால் ஜூலை 1-ஆம் தேதியோடு ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் மீண்டும் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஜூலை 7-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் சிறப்பு ரயில் ஜூலை 7-ம் தேதி இயங்கவில்லை. இதன் காரணமாக வருகிற 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை வாரத்தில் ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.