செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு அரங்கில் ரூ.200-ஆகவும், மற்றொரு அரங்கில் ரூ.300-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் இந்தியர்களுக்கு, அரங்குக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.3,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் வெளிநாட்டினருக்கு, அரங்குக்கு ஏற்ப ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.